சென்னை:இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுக்க ஆரம்பித்த நிலையில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்து அறிவித்தது. இதனையடுத்து தமிழ் பேசும் மாநிலத்திற்கு சென்னை மாகாணம் எனப்பெயரிடப்பட்டது.
அதன் பின்னர் தமிழ் பேசும் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என சங்கரலிங்கானார் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அண்ணாத்துரை தலைமையிலான திமுக அரசு 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 அனடு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
முன்னதாக மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியை கர்நாடகா மற்றும் சில மாநிலங்கள் அதன் அரசு விழாவாக கொண்டாடி வந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் இது போன்ற விழாக்கள் கொண்டாடப்படவில்லை. இது தொடர்பாக பல தமிழ் அமைப்புகள் மற்றும் பல தலைவர்கள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.