சென்னை: தினேஷ் மற்றும் ஜனகநந்தினி ராமசாமி ஆகியோர் பிப்ரவரி முதல் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். திருமண வரவேற்பு நிகழ்வை டிஜிட்டல் முறையில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் (மெட்டாவேர்ஸில்) நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பின்னர் மடிக்கணினி மூலம் வரவேற்பை இணையம் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் வகையில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இயக்கவிருக்கிறார்கள்.
இது குறித்து தினேஷ் கூறும்போது, ”எனக்கு மெட்டாவேர்ஸ் திருமண வரவேற்பை நடத்த வேண்டும் என தோன்றியதை எனது வருங்கால மனைவியிடம் கூறினேன். அந்த யோசனை அவருக்கும் பிடித்திருந்தது. ஹரிபாட்டர் கதைகளில் வருவதைப் போல் மிகப்பிரமாண்ட கட்டிடங்களை வடிவமைத்து Hogwarts School of Witchcraft and Wizardry இடத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும், கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்த ஒரு வருடமாக கிரிப்டோகரன்சியின் ஒரு வடிவமான எத்திரையம் மைனிங் செய்து வருகிறேன். பிளாக்செயின் என்பது மெட்டாவெர்ஸின் அடிப்படை தொழில்நுட்பம் என்பதால், எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், மெட்டாவேர்ஸில் வரவேற்பு நடத்த நினைத்தேன்.