தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏப்.28-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

ஆளுநர் கிடப்பில் போட்டுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் வரும் 28-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Congress
Congress

By

Published : Apr 20, 2022, 10:21 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மோடி அரசு மீண்டும், விவசாயிகளுக்கு எதிராகவும், நடுத்தர கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராகவும் சில திட்டங்களை கொண்டு வர உள்ளதாக குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தவறு. மார்க்கெட்டில் இது என்ன விலை இருக்கின்றதோ அதைத் தான் கொடுக்க வேண்டும். பயிர்களுக்கு காப்பீடு வழங்கக்கூடாது என நிதி ஆயோக் உறுப்பினர் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை, நமக்கும் ஏற்படும்’ என்றும் எச்சரித்தார்.

மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான இந்த செயல்பாட்டை நாம் இப்பொழுதே எதிர்க்கவில்லை என்றால், நாடு மிகப்பெரிய மோசமான நிலைமையை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், 'இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் ஆளுநரை எதிர்த்துப்பேசக்கூடாது. ஆளுநரை எதிர்த்துப்போராட்டம் நடத்தக்கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. கடவுள் மற்றும் மகாத்மா காந்தியையே நாம் விமர்சிக்கிற நிலையில் ஆளுநரை ஏன் விமர்சனம் செய்யக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிந்துள்ள நிலையில், முதலமைச்சர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ்நாடு பாஜக தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள இதுபோன்ற விஷயங்களில்’ சத்தமிடுவதாகவும் விமர்சித்தார்.

’உள்நோக்கத்தோடு ஆளுநர் நியமனம் நடைபெற்றுள்ளது என்றும், மனிதர்களுக்கு இடையான வேறுபாடு குறைவாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டிற்கு, கற்றறிந்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும், காவல் துறையில், உளவுத்துறையில் இருந்த இவரை எல்லைப்பகுதியில் மட்டுமே ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

மாநில அரசு நலன் கருதி ஆளுநர் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், ’தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’ என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு எதிரான செயல்களை செய்வதால்தான், இரண்டு தேர்தல்களிலும் மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள் என்றும், அவர்களோடு சேர்ந்ததால்தான் அதிமுகவையும் புறக்கணித்தார்கள் என்றும், மற்ற மாநிலங்களை கையாள்வதை போல தமிழ்நாட்டைக் கையாள முடியாது என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’இளையராஜா ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பாடலுக்காக நாம் மெய்மறந்து இருக்கலாமே தவிர, அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தந்த அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details