சோனியா காந்தி மகளிர் பேரவை சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, சமத்துவப் பொங்கல் என்பதே பொங்கல் விழாவின் முக்கியத்துவம். சமூகத்தில் அநீதி, நீதி என்று எப்போதும் இருந்து வருகிறது. மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு வந்த பிறகுதான் சமூகநீதி இம்மண்ணில் அதிகரித்தது. ஆனால், இதற்கு அநீதி இழைக்கும் விதத்தில், பாஜக செயல்பட்டு மக்களை பிரித்து பார்க்க முயற்சிக்கிறது என்றார்.
திமுக கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நேற்றைய அறிக்கை நேற்றோடு முடிந்துவிட்டது எனத் தெரிவித்த அவர், திமுகவுடன் எங்களின் உறவு நன்றாக உள்ளது, எப்பொழுதும் போல் நட்பு தொடர்கிறது என்றார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை எனவும் அழகிரி தெளிவுப்படுத்தினார். திமுக உடனான கூட்டணி ஓரிரு இடங்களுக்கானது அல்ல என்றும், இது கொள்கை ரீதியான கூட்டணி எனவும் அவர் தெரிவித்தார்.