இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று நோய் தடுப்புப் பணிகள், மருத்துவச் சிகிச்சைக்கு, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 லட்சத்தை அந்தந்தத் தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கரோனா பரவுதலைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவச் சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமில்லை. இப்பிரச்னையை முதலமைச்சர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்குப் பதிலளித்த முதலமைச்சர், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், உறுப்பினர்கள் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்த நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததைக் குறை கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்' - கரோனாவுக்காக காலர் டியூனாக மாறிய எடப்பாடி பழனிசாமி!