மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ’அட்சய பாத்திரா’ அமைப்பின் சமையலறை பூமி பூஜை விழா, சென்னை கிரீம்ஸ் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி உரையாற்றினர்.
இந்த சமயலறை சென்னையில் மாணவர்களுக்காக உணவு தயாரிக்கும் இரண்டாவது சமயலறையாக இருக்கும். இதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய விருப்ப நிதியிலிருந்து 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதனால் மாநகரிலுள்ள 35 மாநகராட்சி பள்ளிக்கூடங்களைச் சார்ந்த 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இதற்கு முன்னதாக அட்சய பாத்திரா செயல்திட்டமானது, திருவான்மியூரில் உள்ள சமயலறை மூலம் 16 பள்ளிக்கூடங்களில் பயிலும் 5,090 மாணவர்களுக்கு தற்போது உணவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ”தமிழ்நாட்டில் 42,783 பள்ளிகளில் தினந்தோறும் சத்துணவு வழங்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 16,771 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அட்சய பாத்திரா அறக்கட்டளை ஏற்கெனவே 5000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு அளித்து வருவது பெருமையளிக்கிறது. அட்சய பாத்திரா நிறுவனத்திற்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும்” என்றார்.