ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒமர் அப்துல்லா தாடியுடன் இருக்கும் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது.
இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவர்கள் அவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தனர்.
ஒமர் குறித்த மு.க. ஸ்டாலினின் டிவிட்டர் பதிவு
இந்நிலையில், இன்று தமிழ்நாடு பாஜக சார்பாக ஒமர் அப்துல்லாவிற்கு தாடி மழிக்கும் ’டிரிம்மர்’ இயந்திரம் ஒன்றை, அமேசான் மூலம் அனுப்பிவைத்துள்ளனர்.
இதனைக் குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், 'உங்கள் ஊழல் நிறைந்த நண்பர்கள் வெளியில் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், உங்களை இவ்வாறு பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனவே எங்கள் இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்' எனப் பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், டிவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி பலரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஒமர் அப்துல்லா குறித்த தமிழக பாஜகவின் டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சார்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அமேசான் மூலம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனைச் செய்கிறது’ - இந்து ராம் பேச்சு