தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதிவரை நடைபெற்றது.
மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இந்தத் தேர்தலில் மொத்தம் மூன்றாயிரத்து 998 பேர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கினைச் செலுத்திவருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. 42 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்படும்.