சென்னை:தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யச் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி சார்பாக செல்வப் பெருந்தகை, பாமக சார்பாக ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்தார். அதில் நாளை தமிழ்நாடு வேளாண்பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் கூறினார். இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பட்ஜெட்கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறினார்.