தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2021, 10:37 PM IST

Updated : Aug 14, 2021, 10:59 PM IST

ETV Bharat / city

வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் வரவேற்பும் விமர்சனமும்

தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட்டை, இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிலையில், விவசாயிகளின் எதிர்பார்ப்புகள், தேவைகள் நிறைவடைந்ததா என்பது குறித்து விவசாய பெருமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்

சென்னை:இந்த விவசாய பட்ஜெட்டில் அம்சங்கள் பல இருந்தாலும், ஒரு திருப்தியான பட்ஜெட் என்று இதனைக் கூற முடியாது என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு ஊக்கத்தொகை அண்டை மாநிலங்கள் வழங்குவது போல அரசு வழங்கவில்லை என்று கவலையடைந்துள்ளனர். தங்களது நீண்ட நாள் கோரிக்கை நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இந்த வேளாண் பட்ஜெட் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக, முருங்கைக்காய் சிறப்பு மண்டலம் உருவாக்கியுள்ளதை வரவேற்றுள்ளனர். ஒன்றிய அளவில் இயந்திர வாடகை மையங்களை ஏற்படுத்த அரசு அறிவித்துள்ளதை விவசாயிகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உழவர் சார்ந்த அறிவிப்புகள் இல்லை

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் காவேரி தனபாலன், "இந்த வேளாண் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அறிவிப்பு என்றால் வேளாண்மை துறையில் வழக்கமாக ஒதுக்கக்கூடிய தொகையை விட கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் காவேரி தனபாலன் பேட்டி

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இதற்கென தனி துறை ஒதுக்கி, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்தது என்னவென்றால், அனைத்து அறிவிப்புகளும் உழவர் சார்ந்து இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பழையபடி வேளாண்மை துறை படியே அறிவிப்புகள் வெளியிடப்பட்டன" எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வேண்டும்

காவேரி விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கூறுகையில், "விவசாயிகளை பொறுத்த வரை இந்த வேளாண் பட்ஜெட் திருப்திகரமாக இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாடு முழுவதும் 2,51,000 விவசாயிகள் தண்ணீர் மோட்டாருக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், இது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், 55 வயது நிறைவு அடைந்த பெண் விவசாயிகளுக்கும், 58 வயது நிறைந்த ஆண் விவசாயிகளுக்கும் குறைந்த பட்சம் 3000 ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தைத் தந்துள்ளது" என்றார்.

காவேரி விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன் பேட்டி

இதேபோல பாரதீய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் என். வீரசேகரன் நம்மிடம் பேசுகையில், "பாரதீய கிசான் சங்கம் தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேசி தமிழ்நாட்டின் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கி மலைத் தோட்டப் பயிர்களில் இருந்து கடலில் உற்பத்தியாகும் மீன் வரை, விவசாயிகளுக்கு வேண்டிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்தோம்.

எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் அரசின் தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு 2,500 ரூபாய் தருவதாக விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், அரசு 2,100 ரூபாய் கூட அல்லாமல் 2,060 ரூபாய் மட்டுமே அறிவித்திருக்கிறது.

கரும்புக்கான நிலுவைத் தொகைகள் பெரிய அளவில் இருக்க இந்த நிதிநிலை அறிக்கையில் சுமார் 200 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது பெருமளவில் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறினார்.

பாரதீய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் என். வீரசேகரன் பேட்டி

விவசாயிகளின் பொதுவான எதிர்பார்ப்புகள்

  • நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு அதிக ஊக்கத்தொகை இல்லை
  • லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தண்ணீர் மோட்டார் வழங்கவில்லை
  • 55 வயதை கடந்த விவசாய பெண் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்
  • பட்ஜெட் உழவர் சார்ந்து இல்லை. வேளாண் துறை சார்ந்தே இருக்கிறது
Last Updated : Aug 14, 2021, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details