தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சந்தித்து, கரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன், ”கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடி இருப்பதால், இந்தாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது அரசு. இந்த முடிவு வரவேற்கக்கூடியது என்றாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சென்று படித்த மாணவர்களுக்கு மட்டுமே பயன்தரக்கூடியதாக இது அமைந்திருக்கிறது.
திறந்தவெளி கல்வியில் படித்த 10 ஆம் வகுப்பு தனித்தேர்வெழுதவிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, இதுவரை அரசு எவ்வித அறிவிக்கையும் செய்யவில்லை. இதனால், அவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.