சென்னை:Mercy Home for old-age people:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை, திருநெல்வேலி, பழனி ஆகிய இடங்களில் புதிய கருணை இல்லங்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம், நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது வில்லிவாக்கத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 19.1 கோடி மதிப்பீட்டிலும், திருநெல்வேலி அபிஷேக் நகரில் சுமார் 2.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.5 கோடி மதிப்பீட்டிலும், பழனியில் சுமார் 1.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.2 கோடி மதிப்பீட்டிலும் கருணை இல்லம் கட்டுவதற்கு பெருந்திட்டம் வரையறுக்கப்பட்டது.
வரைபடம் மூலம் அவரச மையம், திருக்கோயில், நடைபாதை, தியான மண்டபம், தங்கும் அறை, குடிநீர், கழிப்பறை, தொலைக்காட்சி அறை, பார்வையாளர்கள் அறை, உடற்பயிற்சி சிகிச்சை, வாகனம் நிறுத்துமிடம், தோட்டம், உணவருந்தும் அறை, சமையலறை, நூலகம், மின்தூக்கி, பசுமை வெளி உட்பட பல்வேறு வசதிகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் சில மாற்றங்கள் செய்து பணிகளை விரைவில் தொடங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தை நன்கு பராமரிக்க அறிவுறுத்தல்