தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கும், நகைச்சுவை கலைஞர்களுக்கும் என்றும் பஞ்சம் இருந்ததில்லை. இந்த வரிசையில் தான் 1990 களில் இயக்குநர் இமயம் பாலசந்தரால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் பத்மஸ்ரீ விவேக்.
ஆரம்பகட்டத்தில் ஒல்லியான தோற்றம், அவரது உடல் மொழி பலராலும் ரசிக்கப்பட்டது. தமிழ் மொழியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். பாலசந்தரின் புதுபுது அர்ததங்கள் திரைப்படத்தில் ‘இன்னைக்கு செத்த நாளைக்கு பால்’ என்ற வசனம் பேசி எளிதாக பிரபலமடைந்தார்.
உடல் மொழி, நக்கல், நய்யாண்டி என குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நின்று விடாமல் நகைச்சுவை மூலம் முற்போக்கான கருத்துக்களையும் விதைத்தார். விவேக் நடித்த படங்களில் இவரது நகைச்சுவை காட்சிகளுக்காகவே பல படங்கள் ஓடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.