சென்னை:நேற்று (மார்ச் 18) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, இன்று (மார்ச் 19) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது வரும் 21ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேசம் கடலோர பகுதியில் 22 ஆம் தேதி நிலைபெறக்கூடும்.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (மார்ச் 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
22.03.2022 முதல் 23.03.2022 வரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
19.03.2022:அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.03.2022:அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.03.2022:அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22.03.2022:மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:விதை முதல் விளைச்சல் வரை... மின்னணு வேளாண்மைத் திட்டம்..!