தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள்- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

water resources minister S Duraimurugan
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

By

Published : Jan 8, 2022, 6:41 AM IST

சென்னை: பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டட மற்ற இதரபணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாட்டின் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்த வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

பொதுமக்கள், மணலுக்கான விலையினை இணைய வழியாக செலுத்தி எவ்வித சிரமமுமின்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும். தற்போது 16 லாரி குவாரிகள், 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளின் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை, நடைமுறையிலுள்ள நெட் பேங்கிங்(Net Banking), டெபிட் கார்டு(Debit Card), யூபிஐ(UPI) ஆகிய இணைய வசதிகளையும் பணம் செலுத்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details