சென்னை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,838 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற ஏதுவாக 1,343 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்துசென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை, ஆயுதங்கள் கடத்துவது, சம்பந்தமில்லாத நபர்கள் நடமாட்டம் உள்ளிட்டவையை கண்காணிக்க 455 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.