சென்னை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் எதிரில் "பாரம்பரிய நடைபயணம்" நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
இதில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு, "சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும்" (Tourism for Inclusive Growth) என்கிற கருப்பொருளை வலியுறுத்தியுள்ளது. இதன் நோக்கமானது சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பினை உலக நாடுகளிடத்தே நிலைநிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும்.
இன்று (26.09.2021) தமிழ்நாட்டில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டடங்கள், மாளிகைகளை நினைவுக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற (Heritage Walk) "பாரம்பரிய நடைபயணத்தை"" சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
இந்த நடைபயணமானது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாட்டர் கேட் தொடங்கி சட்டமன்ற தலைமைச் செயலகம், கிங்ஸ் பேரக், க்ளைவ் மாளிகை, கார்ன்வாலிஸ் க்யூபோலா, கோட்டை அருங்காட்சியம், வடக்கு தெரு, பரேடு ஸ்கொயர், புனித மேரி ஆலயம், வாலாஜா கேட், தூய தாமஸ் கேட், தூய தாமஸ் தெரு, புனித ஜார்ஜ் கேட்டை வரை நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "நாளை உலக சுற்றுலா தினமாக கடைபிடிக்கப்படுவதால், பாரம்பரிய நடை பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள கட்டடங்களை நடைபயணமாக சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் கட்டடங்களின் வரலாறு குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு விளக்க உள்ளார்.
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் நீர் விளையாட்டுக்களை தொடங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பின், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு