தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2020, 3:41 PM IST

ETV Bharat / city

மீண்டும் பொதுமுடக்கம்: மீளுமா தமிழ்நாட்டின் தலைநகர்

ஹைதராபாத்: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

lock down
lock down

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகும் நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புகுள்ளாகின்றனர்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பாதிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை மீண்டும் லாக்டவுன் நடைமுறைபடுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1.5 கோடி மக்கள் வசிக்கும் இப்பகுதியில் நோய் பரவலைத் தடுக்கவே இந்த லாக்டவுன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே செயல்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மாநிலம் மொத்த பாதிப்பு தற்போதைய பாதிப்பு குணமடைந்தோர் உயிரிழப்பு
தமிழ்நாடு 44,661 19,679 24,547 435
அதிக பாதிப்புகளை கொண்ட மாவட்டங்கள் பாதிப்பு எண்ணிக்கை பாதிப்பு விகிதம்
சென்னை 31896 71.42
செங்கல்பட்டு 2882 6.45
திருவள்ளூர் 1865 4.18
காஞ்சிபுரம் 709 1.59
திருவண்ணாமலை 671 1.5

தமிழ்நாட்டின் 70 விழுக்காடு பாதிப்பு சென்னை நகரில் மட்டுமே உள்ளது. எனவே தலைநகரில் நிலைமைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை அரசின் முன்நிற்கிறது. பல்வேறு நாடுகள் பொருளாதார தாக்கத்திற்கு அஞ்சியே லாக்டவுனில் தளர்வுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்த தளர்வின் காரணமாக பரவல் அதிகரித்து உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹானஸ் க்ளூக் எச்சரித்துள்ளார்.

லாக்டவுனை திரும்ப அறிவித்த நாடுகள்:

ஊரடங்கில் தளர்வை அறிவித்த சில நாடுகள் சூழல் கருதி மீண்டும் லாக்டவுனை கொண்டுவந்தன. ஜப்பான், சீனா, தென்கொரியா, லெபனான், ஜெர்மனி, ஈரான், சௌதி அரேபியா, எல் சால்வதோர், ஈராக், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் சூழலைக் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அறிவிப்பை மீண்டும் திரும்பக் கொண்டுவந்துள்ளன.

இதுபோன்ற அச்சுறுத்தலை முன்கூட்டியே அவதானித்த பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ் இந்த சூழலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளார். லாக்டவுன் அறிவிப்பை தொடர்ச்சியாக நீட்டித்துக்கொண்டிருப்பது சாத்தியமற்ற செயல் எனவும், தடுப்பூசி உள்ளிட்டவை தயாராவதற்கு குறைந்தது ஓராண்டு காலம்பிடிக்கும். எனவே, இந்த வைரசுடன் மக்கள் வாழ்வதற்கு உரிய வழிகளை கண்டறிவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெறும் லாக்டவுன் அறிவிப்பு மட்டும் போதாது. லாக்டவுனுடன் சேர்த்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை அம்சமாகும். உதாரணமாக சீனாவின் வுஹானில் லாக்டவுன் அறித்தப் பின்னர் அங்கு வசிக்கும் சுமார் 1.1 கோடி மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனவே, சென்னையிலும் லாக்டவுன் காலத்தில் எந்தளவுக்கு பரிசோதனையை அதிகப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நோய் பரவல் கட்டுக்குள் இருக்கும் என்பதே நிபுணர்கள் கருத்தாகும். இந்த சவாலைத் தாண்டி தலைநகர் சென்னை மீண்டெழுமா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு - எவையெவை இயங்கும்?

ABOUT THE AUTHOR

...view details