தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு! - தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை  சார்பில் தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்கனவே இயங்கிவரும் பேருந்துகளுடன் 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Diwali special bus

By

Published : Oct 15, 2019, 7:50 AM IST

Updated : Oct 15, 2019, 8:05 AM IST

தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன், பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் துணை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன், மாதவரம் , பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய ஆறு பேருந்து நிலையங்களில் இருந்து தீபாவளியையொட்டி, வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு ஏற்கனவே இயங்கிவரும் 2 ஆயிரத்து 225 பேருந்துகள் உடன் கூடுதலாக 4 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதையடுத்து, அந்த மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8 ஆயிரத்து 310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு ஆயிரத்து 165 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட நாட்களில் பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் மூலமும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பதிவு மையம் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த முன்பதிவு மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே இதில் பெறப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு மையம் மூலமாக இதுவரை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 33 ஆயிரத்து 870 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 17 ஆயிரத்து 338 பயணிகளும் என மொத்தம் 51 ஆயிரத்து 208 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 2.55 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னையில் அரசுப் பேருந்து ஏறி வியாபாரி உடல் நசுங்கி உயிரிழப்பு: காணொலி வைரல்

Last Updated : Oct 15, 2019, 8:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details