திருச்சி மாவட்டம், திருத்தலையூரைச் சேர்ந்த சுதாகர் என்பவர், கண்ணனூர் வடக்குவேலி கிராமத்தில் தனது மாமா தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான நிலத்தில் சிதிலமடைந்த நிலையிலிருந்த வீட்டை இடித்துள்ளார்.
இதுதொடர்பாக துறையூரைச் சேர்ந்த சுமதி என்பவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சுதாகர் மீது வன்கொடுமை தடைச் சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாத்தையங்கரப்பேட்டை, ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுதாகரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது எனக் கூறி திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றம், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பொய் வழக்குப்பதிவு
இந்நிலையில் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில், முசிறி அப்போதைய டிஎஸ்பி சீதாராமன், தாத்தையங்கரப்பேட்டை காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி, ஜம்புநாதபுரம் காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுதாகர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.