சென்னை:தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இருந்து 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 30 வளரிளம் பருவ பெண்கள் மற்றும் 20 வளரிளம் பருவ ஆண்களுக்கென ஐந்து நாள் பயிற்சி ஆக.29ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதிவரை செங்கல்பட்டு மாவட்டம், ECR சாலையில் உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஜோ கடற்கரை வளாகத்தில் (JOE Beach Resort) நடைபெறுகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நேற்று (ஆக. 30) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பயிற்சி பெறும் வளரிளம் பெண்கள் மற்றும் ஆண்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தார். அமைச்சர், தனது உரையின்போது,"இந்த 50 வளரிளம் பருவத்தினர், மற்றவர்களுக்கு தாங்கள் கற்றதை தெரிவித்து, 6 மாத காலத்திற்குள் இந்த 50 பேர் 5 ஆயிரம் பேராக உருவாகி, மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு எதிரான வன்முறை இல்லாத மாநிலமாக, குழந்தை நேய மாநிலமாக தமிழ்நாட்டினை சிறக்கச் செய்ய வேண்டும்" என்றார்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அறிவுத் திறன் மதிப்பீடுகள் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றில், ஆற்றலூட்டும் பயிற்சியின் மூலம் 50 இளம் பருவத்தினரை குழந்தைகளின் உரிமைகளுக்கான சாதனையாளர்களாக உருவாக்குவதற்காக மாநில அளவிலான பயிற்சியை ஒருங்கிணைத்திருக்கிறது.