சென்னை:வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டு, திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றபின், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்கிடையே வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செல்லுபடி ஆவதுடன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையும் ரத்தாகிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் குறித்துப் பார்க்கலாம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது. இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்"என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
அதிமுக செய்தித்தொடர்பாளர் சிவசங்கரி: "கடந்த அதிமுக அரசில்தான் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. எனினும் நீதிமன்றங்கள் இதற்குத் தடை விதித்துள்ளன. தொடர்ந்து அதிமுக சட்ட ரீதியாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடும்'' என அதிமுக செய்தித்தொடர்பாளர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.