தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோடநாடு கொலை : சசிகலாவிடம் 100 கேள்விகள்...! - கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து ஐஜி விசாரணை நடத்தி வருகிறார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

By

Published : Apr 21, 2022, 3:08 PM IST

Updated : Apr 21, 2022, 3:43 PM IST

சென்னை:நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்குச் சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு முக்கிய பொருள்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் காவல் துறையினர் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிப்புரிந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டது போன்றவை அடுத்தடுத்து பல சந்தேகங்களை கிளப்பியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

புத்துயிர் பெற்ற வழக்கு:கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஆகஸ்ட் மாதம் முதல் மறுவிசாரணைநடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குழுவாகப் பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரின் ஒருவரான ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஐஜி சுதாகர் தலைமையிலான காவல் துறையினர் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேரிடையாக வந்து விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் இன்று (ஏப்.21) காலை 10.55 மணி முதல் ஐஜி சுதாகர் தலைமையில் ஆஷித் ராவத் , ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, இரு பெண் காவலர்கள் உள்பட 8 பேர் சசிகலாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார். எனவே, இந்த தகவலை அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் அளித்து வந்ததால், அவரும் விசாரணையின்போது உடன் இருந்து வருகிறார்.

கோடநாடு எஸ்டேட்டில் இருந்த நிலப்பத்திரங்கள், பணம், நகை, பொருள்கள் என்னென்ன? கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போன பொருள்கள் என்ன? எஸ்டேட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த நபர்கள் யார்? என சசிகலாவிடம் ஐஜி சுதாகரன் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜை வேலைக்கு அமர்த்தியது யார்? எஸ்டேட் மேனேஜர் நடராஜன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் பல கேள்விகள் கேட்டுவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் ஐஜி சுதாகரன் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா அளிக்கக்கூடிய வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்துவருகின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் விசாரணை

Last Updated : Apr 21, 2022, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details