சென்னை: தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா, கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வோர் - பதுக்கிவைப்போர் மீது தமிழ்நாடு காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
வாகன தணிக்கை
இந்நிலையில், இதற்காகக் கடந்த டிசம்பர் 6ஆம் தேதிமுதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு காவல் துறை திட்டமிட்டது. அதனடிப்படையில், தமிழ்நாடு காவல் துறை வாகன தணிக்கை - ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
8 நாள்களில் 520 கிலோ கஞ்சா பறிமுதல்
கடந்த எட்டு நாள்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்றது - கடத்தியதாக 239 வழக்குகள் பதியப்பட்டு 324 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.59.97 லட்சம் மதிப்புள்ள 520 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய 19 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
15 டன் குட்கா பறிமுதல்
அதேபோல், குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டாயிரத்து 940 வழக்குகள் பதியப்பட்டு இரண்டாயிரத்து 983 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.1.64 கோடி மதிப்புள்ள 15 டன் குட்கா பறிமுதல்செய்யப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் மூன்றாயிரத்து 818 கிலோ, சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து 909 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியில்லை