தமிழ்நாடு:2021-2022ம் கல்வி ஆண்டில் பல்வேறு சிறைகளை சேர்ந்த 16 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 217 சிறைவாசிகள் மே 6 ஆம் தேதி துவங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் கோரிக்கையின்படி, சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிடும் வகையில், மாநில பள்ளிக் கல்வித்துறையால் 8 மத்திய சிறைகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022ம் ஆண்டில் 340 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9,901 சிறைவாசிகள் பல்வேறு பாடப்பிரிவுகளை தொடர்ந்து பயின்று வருகின்றனர். 4833 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் அடிப்படை ஆயத்தப் படிப்பையும், 3928 பேர் அடிப்படைக் கல்வி (7ஆம் வகுப்பு வரை) 585 பேர் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு / சான்றிதழ் படிப்புகளை பயின்று வருகின்றனர். 585 சிறைவாசிகள் 8, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை பயின்று, அரசு செலவில் பொதுத் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்படுகின்றனர்.