விருதுநகர்:கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 19 மாதங்களுக்குப் பிறகு இன்று (நவ.01) ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விருதுநகரிலுள்ள அ.ச.ப நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்கள் மகிழ்ச்சி
அப்போது ஆசிரியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாடு அரசு காட்டிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “19 மாத கால இடைவெளியை கடந்து இன்று (நவ.01) மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். சுதந்திரமாகவும் தங்கள் நண்பர்களை கண்ட மகிழ்வுடனும் மாணவர்கள் இருக்கின்றனர். பள்ளிகளை திறந்து மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முதலமைச்சரை பெற்றோர் பாராட்டுகின்றனர்” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு ரெட்அலர்ட்
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை, கண்மாய், மரங்களால் பாதிப்பு ஏற்படாத வண்ணமும், உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு தினத்தை மாற்றிய விவகாரத்தில் 2 கருத்துக்கள் இல்லாத இடம் எதுவும் இல்லை. தமிழறிஞர்களின் அறிவுரையை ஏற்று தமிழ்நாடு என்ற தினம் மாற்றப்பட்டுள்ளது. அதிமுக, திமுகவை எப்படி பாராட்டும்; திமுக செய்யும் காரியத்தால் வரலாறு மாற்றப்படும், வரலாற்றை திருத்தம் செய்து கொண்டிருக்கிறோம். தேதியை மாற்றியிருப்பதால் முதலமைச்சருக்கு எந்த லாபமும் இல்லை, இதனால் மக்களுக்கும், மொழிக்கும், நாட்டுக்கும் லாபம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கடந்த ஆட்சியில் கணக்கில் வராத 2000 கோடி நிதி மீட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்