சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று (செப்டம்பர் 26) செய்தியாளரிடம் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று ((செப்டம்பர் 26) நடைபெற்றது.
இந்தத் தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அதனைக் கடந்து தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருவதால் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை20 லட்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கிறோம்.
ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அது ஆகஸ்ட் மாதம் 91.67 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதில் முதலமைச்சர் அதிக அக்கறை கொண்டுள்ளார்.
இன்று ஐந்து இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டார்.
தலைமைச் செயலரும் தடுப்பூசி செலுத்தப்படுவதை நேரில் ஆய்வுசெய்தார். தமிழ்நாட்டில் இதுவரை அரசின் மூலம் 4.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.