சென்னை: அஸ்ஸாம் மாநிலத்திலிருந்த ஜெயமால்யதா குட்டியாக இருந்த போதே தமிழகத்திற்கு வாங்கி வரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு தொழிலதிபர் ஒருவரால் தானமாக வழங்கப்பட்டது ஜெயமால்யதா.
அஸ்ஸாமில் ஜெயமாலா என்றும் தமிழகத்தில் ஜெயமால்யதா என்றும் அழைக்கப்பட்ட இந்த யானை கடந்த ஆண்டு நடைபெற்ற புத்துணர்வு முகாமின் போது பாகன்களால் தாக்கப்படும் வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து பாகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை ஆதாரமாக கொண்டு யானையை தங்களுக்கே தர வேண்டும் என வரிந்து நிற்கிறது அஸ்ஸாம் அரசு. ஜெயமாலா மட்டுமின்றி அசாமிலிருந்து கொண்டு வரப்பட்டதாக 9 யானைகளை பட்டியலிட்டு அவற்றை மீட்டுக் கொண்டுவருவதற்காக சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆகஸ்ட் 2ம் தேதி நள்ளிரவில் தமிழகம் வந்தடைந்தது.
இந்த குழு இன்று வண்டலூர் பூங்காவில் தமிழக வனத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டியிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் பேசுகையில், “அஸ்ஸாமிலிருந்து நான்கு பேர் கொண்ட வல்லுநர் குழு வந்தனர். அவர்களிடம் வண்டலூர் வனவிலங்கு பூங்காவில் சந்திப்பு நடந்தது. அப்போது அவர்களிடம் யானையை திருப்பி தர முடியாது என கூறிவிட்டோம்.
யானை பல வருடங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டது. யானையை துஷ்பிரயோகம் செய்ததாக பரவிய வீடியோ பழைய வீடியோ. தற்போது அந்த யானை மட்டுமின்றி அனைத்து யானைகளும் நலமாக தான் உள்ளன என விளக்கமளித்தோம். அதற்கு அவர்கள் ஒரு முறை யானையை நேரில் பார்த்து பரிசோதிக்க வேண்டும் என்றனர்.
ஆனால், யானை தற்போது எங்களது கட்டுப்பாட்டில் நலமாக தான் உள்ளது, இங்குள்ள யானை மேலாண்மை குழு யானையை பத்திரமாக பார்த்துகொள்ளும் என்பதால் அவர்களுக்கு யானையை பார்க்க அனுமதி அளிக்க ம்றுத்துவிட்டோம்”, என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை