சென்னை: தமிழ்நாடு அரசு வேலை மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளின் விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. அதில், தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 விழுக்காடு இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, சி.ஏ. பவானிதேவி (வாள்சண்டை), எ. தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி (தடகளம்), வி. சுபா (தடகளம்), மாரியப்பன் (தடகளம்) ஆகியோருக்குத் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி திட்டத்தின்கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி ஆகிய விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரியம், வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை 3 விழுக்காடு, இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.