தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓய்வூதியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஓய்வூதியர்களிடம் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உத்தரவு, மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Jun 19, 2022, 9:10 AM IST

சென்னை: ஓய்வூதியர்களிடம் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையருக்கு, நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் நேற்று (ஜூன்18) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்தாண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஓய்வூதியர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக சில நடைமுறைகளை ஏற்படுத்தி, அதை ஓய்வூதியர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

அதாவது, டி.எல்.சி. என்ற மின்னணு வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமான் இணையதள சேவை; ஐ.பி.பி.பி. என்ற வீட்டு வாசலுக்கு வரும் இந்திய தபால் பேமெண்ட் வங்கி சேவை; இ-சேவை மையம்; ஜீவன் பிரமான் இணையதள சேவையுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை வசதியைக் கொண்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் சேவை; தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது; நேரில் சென்று ஆஜராவது ஆகிய சேவைகளை அவரவர் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:ஐ.பி.பி.பி. சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை, ஓய்வூதியர்களின் வீட்டு வாசல் வரை வர உள்ளது. ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் சான்றிதழை பெறுவதற்காக 200 பயோமெட்ரிக் உபகரணங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சேவைகள் குறித்து ஓய்வூதியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உத்தரவு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள், நகர பஞ்சாயத்து அலுவலகங்கள், சமூக கூடங்கள் ஆகியவற்றின் வளாகங்களில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

செயல் திட்டம்: இ-சேவை மையங்களின் இணையதள இணைப்புக்கு எந்த தடங்கலும் வராமல் உறுதி செய்ய அதற்கான மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கருவூலங்களில் தொடர்பு அலுவலரை நியமித்து, வீட்டுக்கு வரும் சேவை குறித்த விளம்பரங்களை சமூக வலைதளங்கள், பத்திரிகை மூலமாக வழங்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கைகளுக்கான செயல் திட்டத்தை அரசுக்கு நீங்கள் வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை - பிடிஆர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details