முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15.9.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்குத் தீர்வு காண, "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில், 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
அதோடு, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் ’1100’ மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூரில் 12 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தையும் அவர் இன்று திறந்து வைத்தார்.