சென்னை: ஒமைக்ரான் வைரஸ் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்வது போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதை ஆய்வு செய்தோம்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை
மற்ற நாடுகளிலிருந்து வரும் 2 விழுக்காடு நபர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை செலவை அரசே ஏற்கும்.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து அறியபட்ட பின்னர், வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளில் 1869 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தொற்றாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருச்சி, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, சென்னையில் ஓமந்தூரார், ராஜீவ் காந்தி , கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படுள்ளன. ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவுகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மருத்துவமனையில் சிகிச்சை
திருச்சி, சென்னையில் ஒமைக்ரான் வைரஸ் வந்ததாக சமூக வலைதளத்தில் தகவல் பரவுகிறது. யூ.கே விமானத்திலிருந்து சென்னைக்கு வந்த சிறுமிக்குத் தொற்று உறுதியாகி உள்ளது. அவர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மரபணுவைச் சென்னை மரபணு ஆய்வுக் கூடத்திற்கும், பெங்களுர் மரபணு ஆய்வுக்கும் அனுப்பி உள்ளோம். அதன் பின்னர் தான் எந்த வகை வைரஸ் எனத் தெரிய வரும். ஒமைக்ரான் வைரஸ் தொற்று தொடர்பாக வெளிப்படையாகத் தெரிவிப்போம், மூடி மறைக்க மாட்டோம் இது வெளிப்படைத் தன்மையான நிர்வாகம்.