சென்னை: தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையினை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தைத்தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கான சட்ட முன்வடிவு கடந்த ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டது.
மற்ற பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்து வருவதால், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்-அமைச்சரே இருப்பார் என்று சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சட்டமசோதாவிற்கு விளக்கம்கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு ஓரிரு நாளில் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்ட முன்வடிவிற்கான விளக்கங்களை தலைமைச்செயலாளர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: பொதுநிகழ்வுகளில் பேச சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?: ஆளுநருக்கு ஆர்.டி.ஐ.யில் கிடுக்கிப்பிடி கேள்வி