சென்னை: தமிழ்நாடு உள்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இன்று (ஆக. 7) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடிய தீமைகள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், குறிப்பாக பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.