சென்னை: தமிழ்நாட்டில் 30 காவல்துறை அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தமிழ்நாடு காவல்துறையில் மூன்று அலுவலர்கள் டிஐஜிக்களாகவும், 14 அலுவலர்கள் ஐஜிக்களாகவும் பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரம்யபாரதி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராகவும், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று பொன்னி மதுரை சரக காவல்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பர்வேஷ் குமார் நெல்லை டிஐஜியாகவும், பிரவீன்குமார் அபினவ் திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டிஐஜியாக இருந்த ஏ.ஜி.பாபு ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகரக் காவல் ஆணையராகவும், எழிலரசன் ஆயுதப்படை பிரிவு ஐஜியாகவும், செந்தில்குமாரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக பதவி உயர்வு பெற்ற துரைக்குமார் திருநெல்வேலி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய பொறுப்பான மாநில உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஜியாக பதவி உயர்வு பெற்ற ஜெயகவுரி சிபிசிஐடி ஐஜியாக பதவி உயர்வும், காமினி தமிழ்நாடு காவல்துறை குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் இருக்கும் செந்தில் வேலன், அவினாஷ் குமார், அஷ்ரா கார்க் ஆகியோருக்கு ஐஜியாக பதவி உயர்வு பெற்று அங்கேயே பணியைத் தொடர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லலிதா லட்சுமி ஐஜியாக பதவி உயர்வு பெற்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பொறுப்பிற்கு கபில் குமார் சரத்கரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வுசெய்த கனிமொழி