சென்னை: தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 உதவி ஆணையர் வணிகவரித்துறை, 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், 7 உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறை, 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு பொதுப்பணி, என 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை www.tnpsc.gov.in /www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் தவறு இருந்தால் திருத்துவதற்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்வர்களுக்கான முதல் நிலை தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தல் மற்றும் கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததற்கான கடைசி தேதி வரை தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆன்லைன் விண்ணப்பத்தில் கவனக் குறைவு காரணமாக தவறுகள், பிழைகள் மற்றும் தவறான தகவல் அளித்திருந்தால் விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கால இடைவெளியில் சரியான தகவலை கொடுத்து திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார். விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் முடிந்த பின்னர் எந்த ஒரு தகவலையும் திருத்தம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.