கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ”கோவை சிங்காநல்லூர் மருத்துவமனையில் கூடுதலாக நான்கு படுக்கைகளை அமைப்பதற்கு ஆய்வு செய்துள்ளோம்.
சென்னை சவாலாக இருக்கிறது
பாதிப்பு அதிகமாகிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். தற்பொழுது வரை இஎஸ்ஐ மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இங்கு தற்போது 43 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சென்னையை பொறுத்தவரை கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கிறது. தற்போது அந்த வைரஸானது சற்று உருமாறி அதிக வீரியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் முழு ஊரடங்கு?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை முகக்கவசங்கள் அணிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வெளியில் வரவேண்டும். மீண்டும் ஒரு முழு ஊரடங்கு வருமா என்பது குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருகிறார். மருத்துவர்கள் குழு கொடுக்கும் அறிக்கை, ஆலோசனைகளை கருத்தில்கொண்டு அதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. ஒருவேளை மருத்துவர்கள் குழு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தன்னை மேம்படுத்திக் கொள்ளும்படி அறிவுரை கூறினால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அந்தக் கருவிகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், சிகிச்சைகள் குறித்து ஆன்லைன் வாயிலாகவே செல்போன் வசதியுடன் பார்க்கக்கூடிய அளவில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் சிகிச்சை மறுப்பு தெரிவிப்பது, அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் குறையும்.
சென்னையில் இருக்கும் நோயாளிகளை பிற மாவட்டங்களுக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கும் எண்ணம் ஒருபொழுதும் இல்லை. சென்னை நோயாளிகளுக்கு சென்னையிலேயே சிகிச்சை அளிக்கப்படும். கூடுதலாக இடவசதிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணி பேசுகையில், “மாநகராட்சி நிர்வாகம், உள்ளாட்சித் துறை அனைத்தும் இணைந்து கோவை மாநகரில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு நோயாளிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.
இதையும் படிங்க:சென்னையில் 26,000ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு