இது தொடர்பாக நிஷா அளித்துள்ள புகாரில், ”கன்னியாகுமரியைச் சேர்ந்த எனது கணவர் காட்வின் ஜான் வெல்டன் மற்றும் எட்டு மீனர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக குவைத் நாட்டிற்கு உரிய ஆவணம் மற்றும் அனுமதியுடன் சென்றுள்ளனர். இந்த ஒன்பது மீனவர்களிடம் இருந்து, ஈரானின் இஸ்லாமிக் புரட்சி பாதுகாப்பு படை, விசை படகுகளை ப்யூஷார் என்ற இடத்தில் பறிமுதல் செய்துள்ளது. இது பற்றி கேள்வி எழுப்பிய மீனவர்களை எல்லை மீறி வந்ததாகக் கூறி, சட்டத்திற்கு புறம்பாக ஈரான் சிறையில் ஜனவரி 17, 2020 அன்று அடைத்துள்ளனர்.
இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இதனை தெரியப்படுத்தியபோது, வழக்கறிஞர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். அவரோ எனது கணவருக்கு விடுதலை வாங்கித்தர முதலில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டார். நானும் அவரது வார்த்தைகளை நம்பி, கடன் வாங்கி செப்டம்பர் 2020 அன்று பணத்தை அனுப்பி விட்டேன். இந்நிலையில், ஜனவரி 2021 அன்று, ஒன்பது பேருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை ஈரான் நீதிமன்றம் அளித்தது.