சென்னை:இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.
மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள். வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கெனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள்.
திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, மின் கட்டண உயர்வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்தவிதமான முயற்சியையும் எடுக்காதபோதே, மின் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என்று பொய்யான பரப்புரையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக தமிழ்நாடு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்த திமுக, இன்றைக்கு ஆளுங்கட்சியாக வந்த பிறகு மக்கள் நலனை மறந்து இதுபோன்றதொரு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது.
"மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கேற்ப, ஆட்சியில் இல்லாதபோது, 'மக்கள் நலம், மக்கள் நலம்' என்று கபட நாடகத்தை அரங்கேற்றிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தம் மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மடிக் கணிணி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவித் தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கியது.