தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2021 சட்டப்பேரவை தேர்தல்; நீட் தேர்வு ரத்து, திருக்குறள் தேசிய நூல், கலைஞர் உணவகம்- திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! - 2021 சட்டப்பேரவை தேர்தல்

2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை மு க ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமையகத்தில் வெளியிட்டார்.

Tamil Nadu Election 2021 MK Stalin to Release Poll Manifesto MK Stalin DMK Poll Manifesto DMK திமுக தேர்தல் அறிக்கை திமுக மு க ஸ்டாலின் 2021 சட்டப்பேரவை தேர்தல் கனிமொழி
Tamil Nadu Election 2021 MK Stalin to Release Poll Manifesto MK Stalin DMK Poll Manifesto DMK திமுக தேர்தல் அறிக்கை திமுக மு க ஸ்டாலின் 2021 சட்டப்பேரவை தேர்தல் கனிமொழி

By

Published : Mar 13, 2021, 12:58 PM IST

Updated : Mar 13, 2021, 2:55 PM IST

சென்னை: நீட் தேர்வு ரத்து, திருக்குறள் தேசிய நூல், கலைஞர் உணவகம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 61 தொகுதிகள் கூட்டணியிலுள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச் 12) வெளியாகின. முன்னதாக, கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை முன்னாள் முதலமைச்சர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர்களை பட்டியலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 13) வெளியானது.

தேர்தல் அறிக்கை பிரதான அறிக்கை, மாவட்ட அறிக்கை, முத்தான அறிக்கை என மூன்றாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “16ஆவது சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டேன். இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன். நேற்றைய தினம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால் இன்று வெளியாகும் தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன்.

1952இல் திமுக போட்டியிடவில்லை. இருந்தாலும் அன்றைய தேர்தலுக்கும் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியாகிவருகிறது.

தற்போது டிஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்தத் தேர்தல் அறிக்கையை தயாரித்த அனைவருக்கும் நன்றி.

மாபெரும் வரலாற்று கடமையை இவர்கள் செய்துள்ளனர். இது வரலாறு தாண்டி பேசப்படும். இந்தத் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் உள்ளன. இதில் சில முக்கிய வாக்குறுதிகளை நான் இப்போது வாசிக்கிறேன். அவை வருமாறு:-

  1. திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசை வலியுறுத்துவோம்
  2. அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்
  3. முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் தீர்வு காணப்படும். அனைத்து தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.
  4. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  5. பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும். சென்னையில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
  6. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது. அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். ஆவின் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.
  7. அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் ரூ.5 மற்றும் ரூ.4 குறைக்கப்படும்.
  8. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும். பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
  9. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும். அனைத்து அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.
  10. சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையம் உருவாக்கப்படும்.
  11. குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்படும். நகர்புறங்களில் ஆட்சேபனை இல்லாத பகுதிகளில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
  12. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  13. மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி செய்து தரப்படும். இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  14. கிறிஸ்தவ ஆலயம் மற்றும் மசூதிகளை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் படிப்பை முடித்து காத்திருக்கும் 205 அர்சகர்களுக்கும் பணி வழங்கப்படும்.
  15. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ.1500 உதவித் தொகை
  16. 32 லட்சம் கைம்பெண்கள், மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள் ஒய்வூதியம் 1500 ஆக அதிகரிக்கப்படும். மகளிர் பேறுகால உதவி ரூ.24 ஆக உயர்த்தப்படும்.
  17. கலைஞர் உணவகம் 500 இடங்களில் அமைக்கப்படும்
  18. கலைஞர் காப்பீட்டு திட்டம் மேம்படுத்தப்படும்.
  19. கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், அரசு பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  20. பணியின் போது உயிரிழந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
  21. பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.
  22. சிறு குறு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
  23. நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும்.
  24. முதல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் தனியார் வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்க சட்டம் இயற்றப்படும்.
  25. 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு நிலையம் அமைக்கப்படும்.
  26. கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும்.
  27. தமிழர்களின் வேலை தமிழர்களுக்கு வழங்க சட்டம் இயற்றப்படும்.
  28. வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.
  29. மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்களாக மாற்றப்படும்.
  30. கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி அளிக்கப்படும்.
  31. அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கூடிய கைக்கணினி (டேப்) வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் இணைய வசதி செய்துதரப்படும்.
  32. அரசு துறையில் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
  33. நெல் குவிண்டால் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
  34. கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார தொகை தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  35. உழவர் சந்தைகள் விரிவுப்படுத்தப்படும்.
  36. நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திட சட்டம் கொண்டுவரப்படும்.
  37. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பெரிய ஏரிகள் தூர்வாரப்படும். ரூ.2500 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும்.
  38. அதிமுக அரசால் ஏற்பட்டுள்ள கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
  39. மீனவ சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படும்.
  40. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை துரிதப்படுத்தப்படும்.
  41. தமிழக அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம். கல்வி துறை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிகள் செய்யப்படும். சென்னை புறநகர் வெள்ள தடுப்புக் குழு அமைக்கப்படும்.
  42. வேளாண்மை துறைக்கு தனி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழக்கு, எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டுவரப்படும்.
  43. விவசாய பயிர்களுக்கு குறைந்தப்பட்ட ஆதார விலை.
  44. தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தவிர்க்க புதிய சட்ட திட்டம்.
  45. இலங்கை ஈழ படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  46. வெளிநாடு வாழ் தமிழர்களை பேண வெளிநாடு வாழ் அமைச்சகம் வழங்கப்படும். மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
  47. கல்லூரி, பள்ளி மாணவிகளுக்கு இலவச நேப்கின் வழங்கப்படும். பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவார்கள்.
  48. வருமான வரி வரம்பு, தனியார் இடஒதுக்கீட்டை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.
  49. மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படும். மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.
  50. வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
  51. புராதன இந்து கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பங்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும். தமிழ்நாட்டில் ரயில் பாதை இல்லாத இடங்களில் ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.
  52. கோவை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில்
  53. பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும்.
  54. கல்லூரி மாணவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  55. கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உள்பட கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாள்களாக அதிகரிக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுவினரின் நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  56. திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
  57. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யபடும் வகையில் சைபர் காவல் நிலையம் வழங்கப்படும்.
  58. கனிம வளங்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும். கனிம வளங்களை அரசே ஏற்று நடத்தும்.

இவ்வாறு மு க ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். அதேபோல் நானும் சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்ற உறுதிமொழியை தமிழக மக்களுக்கு அளிக்கிறேன்” என்றார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், டிஆர் பாலு, கே என் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் எட்டு பேர் கொண்ட குழு முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான டிஆர் பாலு தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, சுப்புலெட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ஆ. ராசா, டி.கே. எஸ் இளங்கோவன், இராமசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக திகழும் என்று அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு (முழு காணொலி)

Last Updated : Mar 13, 2021, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details