சென்னை: மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து 4,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்குடிஜிபி சைலேந்திரபாபு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், டிஐஜி சத்யபிரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்து கறி விருந்து வைத்துள்ளார்.
மேலும் காவலர்களுடன் ஒன்றாக அமர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உணவருந்தி செல்பி எடுத்துக்கொண்டது காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உணவு பரிமாறினார். அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
காவலர்களுக்கு கறி விருந்து வைத்து அசத்திய டிஜிபி இந்த நடைமுறைக்கு காவல் துறையில் ’படா கானா’ என்று பெயர். ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறை பயிற்சி காலத்தில் இந்த சொல் பிரபலம், இந்தியில் ’படா கானா’ என்பது பெரும்விருந்து எனப்பொருள்.
காவல் மட்டும் அல்ல; ராணுவம் உள்ளிட்ட படைகளிலும் இந்த சொல் பிரபலம். பயிற்சி காலத்தில் சுமாரான உணவை உண்பவர்களுக்கு பயிற்சி முடிவிலோ அல்லது ஏதாவது விசேஷ காலத்திலோ விருந்து அளிப்பார்கள். அதை ’படா கானா’ என்பர்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் காவலர்களுக்கு இதுபோன்று ’படா கானா’ எனப்படும் பெரும்விருந்து அளிக்கப்பட்டதாக காவல்துறை மூத்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அத்திவரதர் நிகழ்வு முடிந்த பிறகும் காவல் துறைக்கு பெரும் விருந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு டிஜிபி ’படா கானா’ எனப்படும் பெரும் விருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், அடுத்த மூன்று நாட்களுக்கு விடுப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு மோடி பாராட்டு