சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், "இந்த அரசு பொறுப்பேற்ற போது, கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள்.
அந்த இக்கட்டான நிலையிலே, தேவைப்படக்கூடிய அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து, அதனை உங்களுடைய கடும் உழைப்பினால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறோம். அதனால் ஏற்பட இருந்த பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் பெருமளவு நாம் குறைத்திருக்கிறோம்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நமது மாநிலத்தில் தடுப்பூசிகள் செலுத்தக்கூடிய பணி தொடங்கியது. இதன் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணியிலிருந்த சுணக்கத்தை முழுமையாக அகற்றி, தடுப்பூசி செலுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக நாம் மாற்றிக் காட்டியிருக்கிறோம்.
அதில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடைய பங்கு மிக மகத்தான பங்கு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனுடைய விளைவாகத்தான், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுள்ள 6.33 கோடி மக்களில், 74.75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
91.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு, தகுதியுள்ளோரில் 41.66 சதவீதம் பேருக்கு இதுவும் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்து, ஒமைக்ரான் வைரஸ் காரணமாக ஏற்பட்ட மூன்றாவது அலையின் தாக்கம் பெரும் அளவில் இல்லை.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்தாலும் கூட, இந்தத் தொற்று கடும் நோயையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு நாம் அனைவரும் இணைந்து எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாகத்தான், பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்பி வருகிறோம்.
பொருளாதாரம் மெல்ல வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருக்கிறது, மக்களுடைய வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை ஒருவார காலமாக மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒமைக்ரான் வைரஸால் தொற்று எண்ணிக்கை உயர்ந்தபோது ஏற்பட்டது போன்றே, தற்போதும் உயிரிழப்புகள் எண்ணிக்கை உயரவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும், நாம் அனைவரும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். நான் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியிருக்கிற அடிப்படையில் இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்திட நம் வசம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வோரில் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட, உயிரிழப்பு ஏற்படுவது மிக மிகக் குறைவு. எனவே, தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தலையாயக் கடமையாக இருந்திட வேண்டும்.
நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்த போதிலும், இன்னும் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நமது சாதனை சற்று குறைவாகத் தான் அமைந்திருக்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் நமது மாநிலத்தில் 1.48 கோடி பேர் இருக்கிறார்கள்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி இருந்தும் அதனைப் செலுத்திக் கொள்ளாதவர்கள் இன்னும் 11.68 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இனிவரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நம் முன் இருக்கக்கூடிய ஒரு சவாலாக அமைந்திருக்கிறது. அடுத்து, பெருந்தொற்றைத் தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு பொருளாதார வளர்ச்சி தடைபட்டுவிடாமலும் மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுவிடாமலும் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அதே நேரத்தில், எதிர்காலத்தில் இந்தப் பெருந்தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.
இது ஒரு பைஃன் பேலன்ஸ் (Fine balance). இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதே நம் குறிக்கோளாக அமைந்திட வேண்டும். இதனை மனதிலே நிறுத்தி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்ற எனது வேண்டுகோளை இந்தத் தருணத்தில் மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!