தூத்துக்குடியில் இன்று (மார்ச் 7) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1,156 ஏக்கர் நிலப்பரப்பில், அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
சர்வதேச அறைகலன் பூங்கா
நாட்டிலேயே முதலாவதாகவும் உலகத்தரத்திற்கு இணையாகவும் சர்வதேச அறைகலன் பூங்காவை உருவாக்கிட அரசு திட்டமிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீளவட்டான் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம் கிராமங்களில் உள்ள 1,156 ஏக்கர் நிலப்பரப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையையொட்டி, இந்த சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
70–80 விழுக்காடு மூலப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்திடும் வகையில் ஒரு சிறப்பான சூழல் அமைப்பை உருவாக்கி, உற்பத்தி செலவினங்களை பெருமளவு குறைத்து, அறைகலன் துறையில், தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில், இந்த சர்வதேச அறைகலன் பூங்கா விளங்கும். மேலும், முழுக்க முழுக்க சூரிய மின்சக்தி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இணக்கத்தை உறுதி செய்தல், கழிவு சேகரிப்பு மற்றும் வெளியேற்றங்களுக்கான சுத்திகரிப்பு வசதி ஆகியவற்றிற்கான சிறப்பு வசதிகளுடன் பசுமை சார்ந்த மாதிரி கருத்துருக்களுடன் இப்பூங்கா அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டம் 4 முதல் 5 ஆண்டுகளில் முழுமையாகச் செயல்படும் தருணத்தில் 1,500 முதல் 1,800 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் மற்றும் 1.1 முதல் 1.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகவும் வாய்ப்புள்ளது.