தொழில்துறையை புரட்டிப்போட்ட கரோனா
உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் சீனாவில் தங்களது உற்பத்திப் பணியையும், அசெம்பிளிங் பணியையும் செய்துவருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து கிடைக்கும் உதிரிபாகங்கள், மூலப்பொருள்களை நம்பியே வணிகம் செய்துவருகின்றன. தற்போது கரோனா தொற்று காரணமாக உலக வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் பன்னாட்டு போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பல நாடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான மூலப்பொருள்களுக்கு சீனாவை நம்பியிருக்க வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக சீனா மீதான சார்பு அதிகரித்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.
சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள்
சீனா மீதான சார்பை குறைக்கும் வகையில், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்களது தொழிற்சாலைகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளன.
சப்ளை செயின் (Supply chain) என்று அழைக்கப்படும் ஒரு பொருளை தயாரிக்க ஒவ்வொரு நிலையிலும் தேவைப்படும் அனைத்து பொருள்களையும், சீனாவைவிட்டு வெளியே எடுத்துவர பன்னாட்டு நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.
இதுபோன்று சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டுவர சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழில் துறையினர் கூறிவந்தனர்.
தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழு
இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இடம்பெயரும் நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழு சிறப்புக் குழுவில் உள்ளவர்கள் யார்?
தலைமைச் செயலர் தலைமையிலான இந்தக் குழுவில், நிதித்துறை கூடுதல் செயலர், தொழில் துறை முதன்மைச் செயலர், வணிக வரித் துறை ஆணையர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை முதன்மைச் செயலர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பு மேலாண் இயக்குநர், தலைமைச் செயலக அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
இது தவிர, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), கொரிய வர்த்தக முதலீட்டு மேம்பாட்டு முகமை (KOTRA), கொரிய வர்த்தக சபை, தைவான் வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (TAITRA) ஆகிய அமைப்புகளிலிருந்து இரண்டு உறுப்பினர்களும், அமெரிக்க தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டிலுள்ள சிங்கப்பூர், ஜப்பான், தைவான், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதியும் தொழில் துறை சார்பாக இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
சிறப்புக் குழுவின் பணி என்ன?
இந்தக் குழு, எந்தெந்த துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கலாம், மற்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்துவரும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க என்ன சலுகைகள், சிறப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும், புதிய தொழிற் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட முதலீடுகளைக் கவர மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், புதிதாகத் தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன எனத் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்பிர்க்க வேண்டும்.
குழு அமைக்கப்பட்ட முதல் மாதத்தில் முதற்கட்ட அறிக்கையும், பின் இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கையும் தாக்கல்செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹிஸ்துஸ்தான் தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜி. சத்குரு தாஸ், "கரோனா பெருந்தொற்று காரணமாக தொழிற்சாலைகள் இடம்பெயர்வது தமிழ்நாட்டிற்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஹிஸ்துஸ்தான் தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜி. சத்குரு தாஸ் தொழில் தொடங்க தேவையான படித்த இளைஞர்கள், இளம் தலைமுறையினரை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகை இங்குள்ளது. வாய்ப்பு உருவாகும் அதே நேரத்தில் சவாலும் உருவாகிறது.
தற்போதைய சூழலில் எப்படி தொழில் தொடங்கப் போகிறோம் என்பது கேள்வியாக உள்ளது. கரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது 12 மாதங்களாகவாவது ஆகும், அதுவரை அன்றாட நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பதே தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி
ஒரு பேரிடராக கரோனா தொற்று பாதிப்பு அமைந்துள்ளது. புதிதாக தொழில் தொடங்கவரும் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி, எளிமையான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
இந்த வாய்ப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இது இங்குள்ள தொழில்களுக்கும் உதவும். கரோனா பிரச்னையை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்" என்றார்.
இதையும் படிங்க:கரோனா: இந்தியா பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? - ஆர்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் பதில்