இது குறித்து செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், “ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் நாளை (மார்ச்.22) விவாதத்திற்கு வரப்போகிறது. இந்தத் தீர்மானத்தை பிரிட்டன், கனடா, செர்மனி, வடக்கு மாசிடோனியா, மாலவி, மான்டினிக்ரோ ஆகிய ஆறு நாடுகள் முன்மொழிந்துள்ளன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐநா மனித உரிமை மன்றத்தின் 46ஆவது கூட்டத்தில் வரவுள்ள, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான இத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கப்போவதில்லை. இலங்கை அரசைத்தான் இந்தியா ஆதரிக்கப்போகிறது என்று உறுதி கூறிவிட்டதாக இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார். (The Hindu 19.3.2021)
ஐநா மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர், கடந்த பிப்ரவரி மாதம் மேற்படி மன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் சுற்றறிகை ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த சுற்றறிக்கையில், ”இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்குப் பொது அரசாக செயல்படவில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அது செயல்படுத்தவே இல்லை. இனியும் அது செயல்படுத்தும் என்று நம்பிட வாய்பில்லை. அங்கு நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. செய்தி ஊடகங்களுக்கு உரிமை இல்லை. மனித உரிமை அமைப்புகள் அங்கு நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனவே இலங்கை அரசு நடத்திய மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவருக்குமான பொறுப்புக் கூறல் (Accountability) போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இலங்கையின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோரை, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐநா பொதுப்பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று, ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.