தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2021, 2:25 PM IST

ETV Bharat / city

வரும் தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை- லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் அறிக்கை

கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம், கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக்கொள்ளலாம் என்பது இந்தக் காலம். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும், அணைக்கவும் இல்லை. நடுநிலையோடு இருக்க விரும்புகிறோம் என்று டி.ராஜேந்தர் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

T rajendar statement
டி. ராஜேந்தர் அறிக்கை

சென்னை:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது லட்சிய திமுக கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை என நடிகரும், அக்கட்சியின் தலைவருமான டி. ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெறவிருக்கும் 2021ஆம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன் ஓபிஎஸ் என்னை அழைத்தார். நீண்ட நாள் நண்பரான அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லாமலும் அதிமுக - திமுக சந்திக்கின்ற முதல் தேர்தல் களம்.

இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம். அதைத் தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறது பலப்பரிட்சை. இதில் நான் போய் என்ன செய்ய போகிறேன் புது சிகிச்சை.

ஒருவருடைய வாக்கு வன்மை, அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிபடும் உண்மை, அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதலமைச்சர்கள் நம்பினார்கள். அதனடிப்படையில் தேர்தல் பரப்புரைக்கு அழைத்தார்கள். அது ஒரு காலம்.

கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக்கொள்ளலாம் என்பது இந்தக் காலம். காலமும் சரியில்லை. களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

பத்தும் பத்தாதற்கு இது கரோனா காலம். பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும் முகக்கவசம். பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும், அணைக்கவும் இல்லை. நடுநிலையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவினிடம் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து உலக மக்களுக்கு ஒரு சினிமா - '99 சாங்ஸ்' பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்

ABOUT THE AUTHOR

...view details