சென்னை : தமிழ்நாட்டிதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருள்களை ஒழிக்க தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கஞ்சா வேட்டை ஆபரேசன் தொடங்கி தீவிரமாக குட்கா மற்றும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து போதை பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கஞ்சா அதிரடி வேட்டை: அந்த வகையில் கஞ்சா வேட்டை 1.0 யில் கஞ்சா, குட்கா, ஹெராய்ன் போன்ற போதை பொருள்களை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மொத்தம் 8,929 பேரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,299 கிலோ கஞ்சா, 40 டன் குட்கா மற்றும் போதை பொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்திய 197 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 28ஆம் தேதி முதல் கஞ்சா வேட்டை 2.0 ஆபரேஷனை தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 15 நாள்களில் மட்டும் 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டிஜிபி சைலேந்திரபாபு: மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல 4,334 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 31.2 டன் குட்கா மற்றும் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளை முற்றிலுமாக ஒடுக்க தமிழக காவல்துறை புதிய நடைமுறையை கையாண்டு வருகிறது. அதாவது கைது செய்யப்படும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகள் சம்பாதித்த மொத்த சொத்துகளை முடக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.