கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஜூன் 5இல் பிறந்தவர் சைலேந்திர பாபு. 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அலுவலராகத் தேர்வுபெற்ற அவர் தர்மபுரி மாவட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளராகத் தனது பணியைத் தொடங்கினார்.
தொடர்ந்து சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, கோபி, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை அடையாறில் காவல் துணை ஆணையராகவும் பணியாற்றினார்.
அடுத்தடுத்து பதவி உயர்வு
பின்னர் விழுப்புரம் சரக டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற அவர், சென்னையின் இணை ஆணையராகவும், பின்னர் திருச்சி சரக டிஐஜி-யாகவும்கூட பொறுப்பு வகித்துள்ளார். இதையடுத்து வடக்கு மண்டல ஐஜியாகப் பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அலுவலர், சிறைத்துறை ஏடிஜிபி என அடுத்தடுத்து தான் பணிபுரிந்த பிரிவுகளில் எல்லாம் தடம்பதித்தார்.
தொடர் பதவி உயர்வு, பாராட்டுகள் என வெற்றிக் களிப்பில் இருந்தவர், அடுத்து தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் கூடுதல் டிஜிபியாகவும் பின்னர் ரயில்வே காவல் துறை டிஜிபியாகவும் பதவி உயர்வுபெற்றார். ரயில்வே டிஜிபியாகப் பணியாற்றியபோது, பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
பல்துறை வித்தகர்
உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு விளையாட்டுத் துறை ஆகியவற்றில் பெரும் ஈடுபாடுகொண்டவர் சைலேந்திரபாபு. 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி, 2003ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டி, 2007ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டிகளிலும் அவர் அங்கம் வகித்துள்ளார்.