அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்று வெற்றி வாகை சூடும் நோக்கில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், சர்வதேச அளவில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்தல், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாவட்ட விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், 2018-2019ஆம் ஆண்டிற்கான 64ஆவது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சார்ந்த 266 மாணவர்கள், 28 விளையாட்டுகளில் 88 தங்கம், 107 வெள்ளி, 109 வெண்கல பதக்கங்களையும், 306 மாணவியர்கள் 29 விளையாட்டுகளில் 135 தங்கம், 100 வெள்ளி, 113 வெண்கல பதக்கங்களையும் என மொத்தம் 572 மாணவ, மாணவியர்கள் 652 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.