சென்னை:லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் சென்னையைச்சேர்ந்த பவானி தேவி தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கமும், குழு பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றார். இந்த நிலையில் பவானி தேவி இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தேவி கூறுகையில், ‘நான் வாள் வீச்சு தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கமும், குழு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளேன். நான் ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். காமன்வெல்த் வாள் வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கின்ற முதல் தங்கப்பதக்கம் இது ஆகும். ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பயிற்சி பெற்றதால் பதக்கங்களை வெல்ல முடிந்தது.
இது இந்தியாவுக்குப் பெருமையான ஒன்றாக நான் கருதுகிறேன். நான் பதக்கம் வெல்வதற்கு எனது பெற்றோர்களும், பயிற்சியாளரும் உறுதுணையாக இருந்தனர். தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் எனக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.